வவுனியாவில் தவிசாளரின் சொகுசு வாகனத்திற்காக 5 மாதங்களில் 17 இலட்சம் காலி!!

716

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் மக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்தி மிக அதிக விலைக்கு வாடகை வாகனம் ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் பெற்றுள்ளமை மக்களிடையே கடும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் ஏற்கனவே அதிகாரிகளினதும் தவிசாளரினதும் பயன்பாட்டிற்காக ஒரு ‘சிங்கிள் கப்’ (Single Cab) ரக வாகனமும் , ஒரு முச்சக்கர வண்டியும் பயன்பாட்டில் உள்ளன.

இதற்கு முன்னர் பதவியில் இருந்த தவிசாளர்கள் இந்த வாகனங்களையே பயன்படுத்தி வந்தனர். இது தவிர மேலதிக தேவைக்காக அரசாங்க அதிபரினால் மற்றுமொரு ‘பிக்கப்’ (Double Cub Pickup) ரக வாகனமும் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தற்போது பதவியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தவிசாளர் புதிய வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். இந்த வாகனத்தின் ஒப்பந்தத்தின் வாகனத்தின் மாதாந்த வாடகை 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபா (3000 கிலோமீட்டர் வரை) மற்றும் மேலதிக கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைத் தாண்டினால் ஒரு கிலோமீட்டருக்கு 150 ரூபாய் எனவும் ஒப்பந்த காலம் ஓராண்டு காலப்பகுதி (2025.11.13 முதல் 2026.11.12 வரை) செய்யப்பட்டுள்ளமையுடன் வாகன வகை டொயோட்டா பிக்கப்(Toyota Double Cup Pickup) ஆகும்

கடந்த ஜந்து மாதங்களில் மாத்திரம் வாடகைக்கு அமர்த்திய டொயோட்டா பிக்கப்(Toyota Double Cup Pickup) வாகனத்திற்காக 17லட்சத்தி 24750 ரூபா கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.

சபையிடம் போதிய வாகன வசதிகள் இருந்தும் மக்களின் வரிப்பணத்தை வீண் விரயம் செய்யும் வகையில் இவ்வளவு அதிக தொகைக்கு ஆடம்பர வாகனம் எதற்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களுடைய அடிப்படைத் தேவைகளான வீதிகள், வடிகால்கள் மற்றும் மின்விளக்குகளைச் சீரமைக்க நிதியில்லை என்று கூறும் சபை தனிப்பட்ட ஆடம்பரத்திற்கு மட்டும் எங்கே இருந்து இவ்வளவு பணத்தைக் கொண்டு வருகின்றது?’ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் இந்த வாகன கொள்வனவு அல்லது வாடகை ஒப்பந்தம் தொடர்பான எந்தவொரு விளம்பரமும் அல்லது கோரிக்கையும் பத்திரிகைகளில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற ஐயம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே சபையிடம் ‘சிங்கிள் கப்’ வாகனம், அரசாங்க அதிபரினால் வழங்கப்பட்ட ‘பிக்கப்’ வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி எனப் பயன்பாட்டிற்கு வாகனங்கள் வரிசையாக இருக்கும்போது எதற்காக மீண்டும் ஒரு டொயோட்டா பிக்கப் வாகனத்தை மக்கள் பணத்தில் வாடகைக்கு அமர்த்த வேண்டும்?

முன்னாள் தவிசாளர்கள் செய்யாத எந்த ‘அதிமேதாவித்தனமான’ பணியைச் செய்ய தற்போதைய தவிசாளருக்கு இவ்வளவு விலையுயர்ந்த வாகனம் தேவைப்படுகிறது? இது மக்கள் பணத்தில் நடத்தப்படும் திட்டமிட்ட பகல் கொள்ளை இல்லையா?

நிர்வாக ரீதியான தேவைகளை விட மக்கள் பணத்தில் இத்தகைய செலவுகள் செய்யப்படுவது வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.