சமூக ஊடகங்களில் பரவி வந்த இளம் பெண்களின் காணொளி : அதிரடியாக கைது செய்த பொலிசார்!!

331

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தி சமூக வலைதளங்களில் காணொளியை பதிவிட்ட யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின் காணொளி கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்திருந்த நிலையில், தொடர்புடைய மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று யுவதிகளையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற யுவதியையும், அந்த மோட்டார் சைக்கிளையும் மொனராகலை, புத்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை செலுத்திய யுவதியிடம் சாரதி உரிமம் கூட இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த யுவதி இன்று (11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.