
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மையம் (Disaster Management Centre – DMC) தெரிவித்துள்ளது.
இன்று (15) காலை 6 மணிக்கு தேசிய அனர்த்த முகாமைத்துவ மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
மேலும், மோசமான வானிலை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதற்கிடையில், இதுவரை 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 104 பேர் தற்போது இரண்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று (15) முற்பகல் 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளை பகுதியில் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதால், பல ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் நீர்மட்டங்கள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் ஈரவலயப் பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், ஆறுகளை அண்டிய மற்றும் தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென எல்.எஸ். சூரியபண்டார அறிவுறுத்தினார்.




