திருமண நிகழ்வுக்கு சென்று வீடு திரும்பியவர் விபத்தில் பலி!!

20

அம்பாந்தோட்டை திஸ்ஸ வெலிகத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், ரம்புக்வெவ கடற்றொழில் கிராமத்தைச் சேர்ந்த 61 வயதுடைய திருமணமான நபரே உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நபர் திருமண விழா முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்ப முற்பட்ட போதே விபத்து நேர்ந்துள்ளது.

ஹோட்டலில் இருந்து திடீரென பிரதான வீதிக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இதன் காரணமாக, திஸ்ஸமஹாராமையில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த லொறியின் வலது பக்கப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

லொறியில் மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தூக்கி வீசப்பட்டு வீதியின் நடுவில் விழுந்துள்ளதுடன், அதே நேரத்தில் ஹம்பாந்தோட்டையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பில் லொறி மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.