வவுனியா ஓமந்தையில் 4 நாட்களாக பூட்டப்பட்டுள்ள பிரதேச சபை முன்பள்ளி : சிறுவர்களின் கல்வி பாதிப்பு : நிதி முறைகேடு தொடர்பிலும் விசாரணை!!

182

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் இயங்கி வரும் ஓமந்தை முன்பள்ளி, கடந்த வியாழக்கிழமை முதல் இன்று செவ்வாய்க்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த முன்பள்ளிச் சிறுவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளரைத் தொடர்புகொண்டு வினவியபோது, “முன்பள்ளி ஆசிரியரின் சுகயீனம் காரணமாகவே முன்பள்ளி மூடப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

எனினும், ஆசிரியர் சுகயீனமுற்றால் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து முன்பள்ளியைத் தொடர்ந்து இயக்குவதற்கு பிரதேச சபை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

முன்பள்ளியில் நிதி முறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக பல்வேறு தரப்பு முறைப்பாடுகளின் அடிப்படையில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிக்காக ஒவ்வொரு பிள்ளையிடமிருந்தும் தலா ரூ.5000 வீதம், மொத்தம் பயிலும் 18 பிள்ளைகளிடமிருந்து 90,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கேள்வியெழுப்பியபோது, “பிரதேச சபையிலிருந்து பணம் வழங்கப்படவில்லை, அதனால் பெற்றோரே வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசூலிக்கப்பட்ட அந்தப் பெருந்தொகையின் கணக்கு விவரங்கள் (வரவு – செலவு) எதுவும் பெற்றோருக்கு முறையாகச் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும்,

முன்பள்ளிச் சிறுவர்களின் சுற்றுலாவுக்கென்று அங்கத்தவர் அடிப்படையில் பெற்றோரிடமிருந்து பணம் பெறப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பணத்திற்கும் இதுவரை எவ்வித வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பில்லை எனவும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு பல்வேறு நிதிக் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையிலேயே, ஓமந்தை முன்பள்ளி திடீரென நான்கு நாட்களாகப் பூட்டப்பட்டுள்ளது.

ஆசிரியரின் சுகயீனம் என்ற காரணம் கூறப்பட்டாலும், நிதி முறைகேட்டு விசாரணைகளைத் திசைதிருப்ப அல்லது தாமதப்படுத்த இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.

எது எவ்வாறாயினும், அதிகாரிகளின் இத்தகைய பொறுப்பற்ற தன்மையாலும், முறையான மாற்று ஏற்பாடுகள் இன்மையாலும் போதிய விபரமறியாத முன்பள்ளிச் சிறுவர்களின் ஆரம்பக் கல்வி மற்றும் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த நிதி முறைகேடுகள் குறித்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்துவதோடு, சிறுவர்களின் கல்வியைக் கருத்திற்கொண்டு உடனடியாக முன்பள்ளியை மாற்று ஆசிரியர் ஒருவரைக் கொண்டு இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.