இலங்கையில் வட்டி வீத உயர்வு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!!

13

இலங்கையில் நேற்று அதிகரிக்கப்பட்ட பணவியல் கொள்கை வட்டி வீதம் என்பது மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்படும் அடிப்படை வட்டி விகிதமாகும் என பொது மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வட்டி பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்படும் கடன் வட்டி அல்ல என்றபோதிலும், வணிக வங்கிகள் மத்திய வங்கியிடமிருந்து பணத்தைப் பெறும்போது அல்லது வைப்புச் செய்யும்போது இந்த அடிப்படை வட்டியே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தக் கொள்கை வட்டி வீதம் ஒரு சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டால், தனிநபர், வீட்டு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி வீதங்கள் உடனடியாக உயரும்.

உதாரணமாக, முன்னர் 12 சதவீதமாக இருந்த கடன் வட்டி, 13 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக மாறுவதால் பொதுமக்கள் மற்றும் வணிகங்களின் கடன் சுமை அதிகரிக்கும்.

வட்டி உயர்வால் கடன் பெறுவது கடினமாகவும் செலவுமிக்கதாகவும் மாறுவதால், மக்களின் செலவீனங்கள் குறையும் என குறிப்பிடப்படுகின்றது.

எனினும் புதிய தொழில்களைத் தொடங்குதல், வாகனங்கள் வாங்குதல், வீடு கட்டுதல் மற்றும் நுகர்வுப் பொருட்களைக் கொள்வனவு செய்தல் போன்ற நடவடிக்கைகள் சந்தையில் கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது.

பொதுமக்களும் வணிகங்களும் குறைவாகக் கடன் பெறுவதால் சந்தையில் பணப் புழக்கம் குறைந்து, பொருட்களுக்கான தேவையும் வீழ்ச்சியடையும்.

சந்தையில் பணப் புழக்கம் அதிகமாக இருந்தால் பொருட்களின் விலை உயரும் என்பதால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே இந்த வட்டி வீத உயர்வின் முதன்மை நோக்கமாகும்.

இதன் சாதகமாக, பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு பொருட்களின் விலை வேகமாக உயர்வது தடுக்கப்படும். அத்துடன், வைப்பு வட்டி அதிகரிப்பதால் சேமிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப்படும்.

அத்துடன், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் நாட்டின் நாணய மதிப்பை ஸ்திரப்படுத்தவும் இந்த வட்டி வீத அதிகரிப்பு உதவும். எனினும் இதன் பாதக விளைவாக மாறும் வட்டி வீதக் கடன்களைப் பெற்றவர்களின் மாதாந்திரத் தவணை கட்டணம் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழில்கள் மற்றும் சிறு வணிகங்களின் விரிவாக்கம் மந்தமடைவதால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைவடைந்து, புதிய வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.