வவுனியாவைச் சேர்ந்த பெண் ஓமனில் உயிரிழப்பு : உடல் நாடு திரும்பியது : மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் ஆதங்கம்!!

198

குடும்பச் சுமை காரணமாக ஓமான் நாட்டிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் ஓமானில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்தவர் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா என கூறப்படுகின்றது. வெளினாடு சென்ற பின்னரும் கணவர் மற்ரும் பிள்ளைகளுடன் தொடர்ந்து தொலைபேசியில் சந்தோசமாகவே உரையாடி வந்துள்ளார்.

அதன் பின்பு , கடந்த மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் அவரிடமிருந்து குடும்பத்தினருக்கு எந்தவிதமான தொலைபேசி அழைப்புக்களும் வரவில்லை.

இதனால் பதற்றமடைந்த கணவர், சிந்துஜாவின் தொலைபேசிக்கு பலமுறை அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து, குறித்த பெண் மரணமடைந்துவிட்டதாக அதிர்ச்சிச் செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. அவர் தவறான முடிவு எடுத்து இறந்துள்ளதாக வவுனியா ஓமந்தையில் உள்ள அவரது குடும்பத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், அவரது மரணத்திற்கான பின்னணி மற்றும் உண்மையான காரணம் குறித்து இதுவரை தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை.

இந் நிலையில் உயிரிழந்து சுமார் ஒரு மாத காலத்தின் பின்னர், அவரது உடல் இன்று கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்தில் அவரது உடல் கணவரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, மேலதிக சட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குடும்ப வறுமையை போக்க வெளிவாடு சென்ற பெண் , சடலமாக திரும்பியுள்ளமை குடும்பத்தினரையும் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.