ஷிகெல்லா தொற்று பாதிப்பால் 4 வயதுச் சிறுமி பரிதாபமாக பலி!!

16

கேரள மாநிலத்தில் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீர் மூலம் வேகமாகப் பரவக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா குடல் தொற்று நோய் பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்குக் கடுமையான காய்ச்சல்,

வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

கோழிக்கோடு மாவட்டம் தளக்களத்தூர் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி நிலா, கடந்த 2-ஆம் தேதி வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற கடுமையான அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

அங்கு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவளது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அந்த ஆய்வக முடிவில் சிறுமிக்கு ஷிகெல்லா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சிறுமி நிலா பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளிதரன் கூறும்பொழுது, கோழிக்கோட்டில் இந்த நோய்த் தொற்றால் சிறுமி ஒருத்தி உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் வயநாடு மாவட்டத்தில் உள்ள 2 பள்ளிகளைச் சேர்ந்த 164 மாணவ-மாணவிகளுக்கு இந்த நோய்க்கான தீவிர அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மருத்துவ அறிக்கை வந்த பின்னரே முழு விவரமும் தெரியவரும் என விளக்கமளித்தார்.