எரிபொருளின் விலையை 700 ரூபாவாக அதிகரிக்க உறுதியளித்துள்ள அரசாங்கம்?

179

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் உச்சகட்டமாக எதிர்வரும் செப்டம்பருக்குள் மாபெரும் உணவுப் பற்றாக்குறையொன்றை எதிர்கொள்ள நேரிடும் என்று ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையின் பொருளாதாரம் தற்போது மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது . எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நாட்டில் ஒரு மாபெரும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த காலத்தில் டொலரின் மதிப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வெறும் தற்காலிகத் தீர்வுகளேயாகும்.

சந்தையில் அரசாங்கக் கையிருப்புகளை வெளியிடுவதன் மூலமும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணத்தை அவசரமாக வரவழைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் அரசாங்கம் செயற்கையாக டொலரின் மதிப்பைக் குறைக்க முயன்றபோதிலும்,

வரும் ஜூலை மாதத்திற்குள் டொலரின் மதிப்பு மீண்டும் உயரும். அரசாங்கத்தின் திறமையின்மையால் ரூபாயின் மதிப்பு மேலும் குறையும், வாழ்க்கைச் செலவு கடுமையாக அதிகரிக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களின்படி ஒரு லீட்டர் எரிபொருளின் விலையை 700 ரூபாவாக உயர்த்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அதன் காரணமாக எரிபொருள் விலை அதிகரிக்கும் போது ஏனைய பொருட்களின் விலையும் அதிகரிக்கும்.

அதன் ஊடாக நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்கும், உணவுப் பற்றாக்குறைக்கும் முகம்கொடுக்க நேரிடும் என்றும் ராஜித சேனாரத்ன எச்சரித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான பின்னணியில், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அரசாங்கம் சற்றும் தயாராக இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவது என்பது அனைத்து மாகாண சபைகளையும் எதிர்க்கட்சிக்கு வெள்ளித் தட்டில் வைதது வழங்குவது போலாகும் என்பதால்,

தேர்தல்களை நடத்துவதைத் தவிர்க்கவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.