உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் : அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

34

டெங்கு நோய் தற்போது உயர் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 74 ஆக இருந்த டெங்கு உயர் அபாய மண்டலங்களின் எண்ணிக்கை தற்போது 84 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், இரத்தினபுர, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு தற்போது வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாடசாலை மாணவர்கள் டெங்கு வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், 4 டெங்கு வைரஸ் குழுக்களில் வலிமையான ஒன்றான டெங்கு 2 (DENV-2) வைரஸ், பரவலாக பரவி வருகின்றது.

மேலும், கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தறை, இரத்தினபுர மற்றும் களுத்துறை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 89 டெங்கு உயர் அபாய பிரிவுகள் சுகாதாரத்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல், நாட்டில் 41,144 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், 24 இறப்புகள் பதிவாகியுள்ளன.

சர்வதேச அனுபவங்களின் அடிப்படையில் டெங்குவை முற்றிலுமாக ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தைத் தயாரிப்பது குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், டெங்கு கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் அனைவரும் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் என்று சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி மற்றும் உடல் வலி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த நோய்க்கு, சிகிச்சையில் தாமதம் ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தினமும் சுமார் 750 நோயாளிகள் பதிவாகி வருவதனால், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, மருத்துவமனைகள் நெருக்கடி நிலைக்கு வந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.