
வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான வீதி ஒழுங்குமுறை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கும், நேரடி நடைமுறைப் பயிற்சி அமர்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களிடையே வீதி ஒழுங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்வு இரு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் முதல் கட்டமாக, பாடசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் மாணவர்களுக்கான நேரடி நடைமுறைப் பயிற்சி அளிக்கப்பட்டது. வீதிகளில் எவ்வாறு பாதுகாப்பாக நடமாட வேண்டும், பாதசாரிக் கடவைகளை (Crossing) எவ்வாறு பயன்படுத்த வேண்டும்,

போக்குவரத்து சிக்னல்களை எவ்வாறு அவதானிக்க வேண்டும் மற்றும் பாடசாலை முடிந்து வெளியேறும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் எவை என்பது குறித்து ஒரு குறு நாடகம் (வீதி நாடகம்) வடிவில் மாணவர்களுக்கு தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது.

இந்த நேரடி காட்சிவடிவ விளக்கமானது மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், விதிமுறைகளை எளிதில் புரிந்து கொள்ளவும் உதவியது.

அதனைத் தொடர்ந்து, நிகழ்வின் இரண்டாம் கட்டமாக மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கும் கருத்து அமர்வும் பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, வீதி விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள், சட்ட திட்டங்கள் மற்றும் தற்கால போக்குவரத்து சவால்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திலிருந்து வருகை தந்த சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரைகளை ஆற்றியதுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தனர்.

இவ்விழிப்புணர்வுப் பேரணியிலும் கருத்தரங்கிலும் ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருடன், அயல் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

இவ்வேலைத்திட்டமானது, எதிர்கால சந்ததியினரை வீதி ஒழுங்குமுறைகளைப் பேணும் பொறுப்புள்ள பிரஜைகளாக மாற்றுவதற்கு இட்ட ஒரு முக்கிய அடியாகும் என சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






