வவுனியாவில் வாயில்லா ஜீவனைக் காத்த மனிதநேயம் : நெகிழ்ச்சி சம்பவம்!!

189

மனிதாபிமானமும் ஜீவகாருண்யமும் இன்னும் இந்த மண்ணில் சாகவில்லை என்பதை உணர்த்தும் நெகிழ்ச்சியான சம்பவமொன்று வவுனியாவில் அரங்கேறியுள்ளது.

வீதியில் தவித்த வாயில்லா ஜீவன் ஒன்றின் துயர் துடைத்த இரு இளைஞர்களின் செயல் பொதுமக்களின் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது.

வவுனியா – மன்னார் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் மாடு ஒன்று உணவு தேட முயன்றுள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக அந்த மாட்டின் தலை குப்பைத் தொட்டிக்குள் பலமாக மாட்டிக்கொண்டது.

தலையை வெளியே எடுக்க முடியாமல், கண் தெரியாத நிலையில் வலியோடும் பயத்தோடும் அந்த மாடு வீதியில் அங்குமிங்குமாக அலைந்து திரிந்து தவித்துள்ளது.

ஆபத்தான முறையில் மாடு தவித்துக் கொண்டிருந்ததைக் கண்ட பலரும் கடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சற்றும் யோசிக்காமல் தமது வாகனத்தை உடனடியாக நிறுத்தினர்.

ஏனோ தானோ என்று கடந்து செல்லாமல், அந்த மாட்டின் தவிப்பைக் கண்டு ஓடிவந்து, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மாட்டின் தலையில் சிக்கியிருந்த குப்பைத் தொட்டியைப் போராடி அகற்றி, அதனைப் பத்திரமாக மீட்டெடுத்தனர்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகளுக்கு இலக்கணமாக, வாயில்லா ஜீவனின் துயர் துடைத்த அந்த இரு மனிதர்களின் கருணை உள்ளம் அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இவ்வியத்தகு மனிதாபிமானச் செயல் சுற்றியிருந்தவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தியதுடன், சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் தற்போது பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது. மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு இச்சம்பவமே சான்றாகும்.