எஜமான் உதைத்ததால் உயிரிழந்த நாய்க்குட்டி : உதைத்த நபரும் உயிரிழப்பு!!

158

சிலாபம் பகுதியிலுள்ள ஒரு தோட்டத்திலிருந்து செல்லப்பிராணியாக வளர்ப்பதற்காக வீட்டிற்குக் கொண்டுவரப்பட்ட இரண்டு வார வயதுடைய நாய் குட்டி கடித்ததால் , பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவர் குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாய்க்குட்டியால் கடிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இறப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய, உயிரிழந்தவரின் மூளையின் சில பகுதிகள் மேலதிக அறிவியல் பரிசோதனைக்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் நிபுணர்களிடம் அனுப்பப்பட்டுள்ளன.

குடும்பத்தினருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைத்த பிறகு அதிகாரப்பூர்வ இறப்புக்கான காரணம் அறிவிக்கப்படும் என்று அவசர கால மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார். பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி,

இவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு அந்த நாய் குட்டியை வீட்டிற்குக் கொண்டு வந்திருந்தார். ஒரு நாள், எதிர்பாராதவிதமாக அவர் நாய் குட்டியின் காலின் மீது மிதித்துவிட்டார்.

இதனால் திடுக்கிட்ட நாய் குட்டி அவரைக் கடித்த நிலையில் , அவர் உதைத்ததில் நாய் குட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

பின்னர், அவர் இறந்த அந்த விலங்கின் உடலை அடக்கம் செய்தார். அவசர கால மரண விசாரணை அதிகாரியின் முன்னிலையில் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மகன் அளித்த சாட்சியங்கள் மூலம் இந்த விவரங்கள் தெரியவந்தன.

இந் நிலையில் கடித்த சம்பவத்திற்குப் பிறகு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட இவர், குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குள்ள ஒரு பிரத்யேகத் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தாக கூறப்படுகின்றது.

இந்த மரணத்தைத் தொடர்ந்து, குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனையின் அவசர கால மரண விசாரணை அதிகாரி திரு. ஹெட்டிகமகே நந்தன பிரியா, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் அனைவரும் உடனடியாக வெறிநாய்க்கடி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.