இளம் தாயின் மரணம் : நீதி கோரி கணவர் உருக்கமான வேண்டுகோள்!!

148

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்குப் பின்னர் உயிரிழந்த இளம் தாயின் மரணம் தொடர்பில், தங்களுக்கு நீதி கிடைக்கவும்,

அசல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பிரசவத்திற்குப் பின்னர் இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி தங்களது தரப்புக் கருத்துகளை வெளியிட்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த உயிரிழந்த ஜெயப்பிரியாவின் கணவர் மதுர அந்தகன், தனது மனைவியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அவரது கூற்றுப்படி, தனது மனைவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட முதல் நாளிலேயே தனியார் மகப்பேற்று மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அது சாதாரண காய்ச்சல் எனக் கூறி மருந்துகள் வழங்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன் பின்னர் காய்ச்சல் தீவிரமடைந்ததால் அரசு வைத்தியசாலையின் 7ஆம் வார்டில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கும் பலமுறை இரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது சாதாரண காய்ச்சல் என்றே தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், தனது மனைவி குடும்பத்தினருக்கு முன்னறிவிப்பு வழங்கப்படாமல் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு டெங்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள தேவையான வசதிகள் இல்லை எனக் கூறி வெளி ஆய்வகத்தில் பரிசோதனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தக் குடும்பத்திற்கும் ஏற்படக் கூடாது. எனது மனைவியின் உயிரிழப்புக்குப் பொறுப்பானவர்கள் பதிலளிக்க வேண்டும்.

எங்களுக்கு நீதி கிடைக்க ஜனாதிபதியும் நீதித்துறையும் உடனடியாகத் தலையிட வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அல்லது சுகாதார அதிகாரிகளின் பதில் இதுவரை வெளியாகவில்லை.

இதனையடுத்து, கணவர் சொந்த முயற்சியில் இரத்த மாதிரியை எடுத்துச் சென்று தனியார் ஆய்வகத்தில் பரிசோதித்ததில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ரிப்போர்ட்டைப் பார்த்த பின்னரே, அது டெங்கு காய்ச்சல் என்பதை மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, “சாதாரண முறையிலேயே பிரசவம் நடக்கும்” என மருத்துவர்கள் உறுதியளித்தவாறே பிரசவமும் நடந்துள்ளது.

குழந்தையைப் பெற்றெடுத்த பின்னர், 21-ஆம் திகதி மாலை வரை ஜெயப்பிரியா தனது குடும்பத்தினருடன் நலமாகப் பேசியுள்ளார். ஆனால், அன்றிரவு திடீரென அவருக்குக் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தினரிடம் எவ்வித அனுமதியோ, ஒப்புதல் கையெழுத்தோ பெறாமல் நள்ளிரவில் மருத்துவர்களால் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மறுநாள் காலையில் குடும்பத்தினர் பார்க்கச் சென்றபோதே இந்த விபரம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின் பெண்ணின் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கியுள்ளன. தொடர்ந்து மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருந்த ஜெயப்பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

“எனது மனைவியின் பிரசவத்தின் போது அங்கிருப்பேன் என்று உறுதியளித்த டாக்டர் சரவணன், பிரசவத்தின் போது அங்கு இல்லை” என்றும், “கர்ப்ப காலத்தின் 10 மாதங்களில் 12 முதல் 13 முறை தனியார் முறையில் ஸ்கேன் செய்த அறிக்கைகள்,

சிகிச்சைக் குறிப்புகள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் முக்கிய ஆவணமான ‘ஏ-கார்ட்’ போன்ற எதனையும் மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் ஒப்படைக்க மறுத்து மறைத்து வருகிறது” என்றும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார்.

“எனக்கு நேர்ந்த இந்தத் துயரம் இனி வேறு எந்தவொரு குடும்பத்திற்கும் நடந்துவிடக் கூடாது. எனது மனைவியின் இழப்பிற்குச் சம்பந்தப்பட்ட அனைவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்” எனக் கண்ணீருடன் குறிப்பிட்ட அவர்,

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவும், ஒரிஜினல் மருத்துவ ஆவணங்களை மீட்டுத் தரவும் ஜனாதிபதி மற்றும் நீதித்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.