நடுவானில் திடீரென மாயமான விமானம் : துண்டிக்கப்பட்டுள்ள தொடர்புகள் : பல மணிநேரம் தொடரும் தேடுதல்!!

20

பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த, பாகிஸ்தானிய சரக்கு விமானம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை காணாமல்போனதாக பாகிஸ்தான் விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த விமானத்தில் ஐந்து பேர் இருந்துள்ளதுடன், காணாமல் போன விமானத்தைக் கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியுள்ளது.

ஷார்ஜாவில் இருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்த K2 எயார்ர்வேஸ் நிறுவனத்தின் B737 சரக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9.18 மணிக்கு நெவிகேஷன் சிஸ்டமில் கோளாறு ஏற்பட்டதாகவும்,

கராச்சி பகுதி கட்டுப்பாட்டு மையம் (ACC) உடனடியாக அதற்கு வழிகாட்டியதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

“இருப்பினும், இரவு 9.22 மணிக்கு, அந்த விமானம் திசையை வேகமாக மாற்றிக்கொண்டு மிக வேகமாக கீழே இறங்கிய நிலையில், கராச்சியில் இருந்து மேற்கே சுமார் 155 கடல் மைல் (NM) தொலைவில் ரேடார் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் சேவையான Flightradar24-இன் முதற்கட்டத் தரவுகளின்படி, 27 ஆண்டுகள் பழமையான அந்த விமானம், கராச்சி நகரின் தென்மேற்கே கடற்பகுதியை நெருங்கும்போது திடீரெனப் பலமுறை உயரத்தை மாற்றி, பின்னர் வேகமாகத் தாழ்ந்துள்ளது.

அதன்படி, விமானம் கடலில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, காணாமல் போன விமானத்தை கண்டறிய பல்வேறு அமைப்புகள் மூலம் கடலில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.