நீரில் மூழ்கிய மாணவன் சடலமாக மீட்பு!!

64

புதிய இணைப்பு : கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் காணாமல் போயிருந்த மாணவன் இன்று(14.07.2026) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலாம் இணைப்பு : நண்பர்களுடன் குளிக்க சென்று காணாமல் போன மாணவனை இரண்டாவது நாளாக இன்றும்(14.07.2026) தேடும் பணி முன்னெடுக்கபட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 10 மாணவர் ஒருவர், பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்றபோது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து தீவிரமாகத் தேடியும் மாணவனின் உடலை நேற்று (13) கண்டறிய முடியவில்லை என்பதோடு, போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று திங்கட்கிழமை (13) நண்பகல் சுமார் 12.30 மணியளவில்,

பாடசாலையில் நடைபெற்ற பரீட்சையை எழுதி முடித்த 10 மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறி, ஓல்ரிம் பகுதியின் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் ஆகுரோயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது, மாணவர்களில் ஒன்பது பேர் பாதுகாப்பாக கரை திரும்பிய நிலையில், ஒரே மாணவன் மட்டும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணாமல் போன மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிளகுசேனை தோட்டத்தைச் சேர்ந்த பரமநாதன் கிஷோர் (15 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனைத் தேடும் பணிகளை லிந்துலை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து இரண்டாவது நாளாக தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.