சிறையில் மலர்ந்த காதல் : சிறைக்குள்ளேயே கொலைக் குற்றவாளிகளுக்கு திருமணம் செய்ய அனுமதி!!

122

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கொலைக் குற்றவாளிகள் சிறைக்குள் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சிறைச்சாலையில், கொலை குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வருபவர் மூலாராம் (33). கொலை வழக்கில் குற்றவாளியாக இருக்கும் சீமா காட்சே (31) என்ற பெண், தற்போது பிணையில் வெளியே உள்ளார்.

மூலாராமும், சீமாவும் சிறையில் சந்தித்து காதலித்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதற்காக ‘தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான’ மனுவை மூலாராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிமன்றம், கைதிகள் இருவரும் ஜோத்பூர் சிறைச்சாலையில் திருமணம் செய்துகொள்ள அனுமதி அளித்துள்ளது.

சிறைவாசம் என்பது அரசியலமைப்பு சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம்,

வயது வந்த இருவருக்கு இடையிலான திருமணம் என்பது அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்துள்ள வாழ்வுரிமை மற்றும் தனிநபர் சுதந்திரத்தின் ஒரு அங்கம் என்றும் தெரிவித்தது.

இவர்களின் திருமணம் வருகிற 22ஆம் திகதி நடைபெறும் என்றும், 21 பேர் வரை வெளியில் இருந்து வந்து திருமணத்தில் கலந்துகொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.