துறைமுகத்தில் கைவிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான மதிப்புள்ள வாகனங்கள் : சிக்கலில் இறக்குமதியாளர்கள்!!

55

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணங்கள் காரணமாக இறக்குமதியாளர்கள் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 1000 சொகுசு கார்களை விடுவிக்காமல் இருப்பதாக இலங்கை சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சுமார் 40,000 இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவை மறு ஏற்றுமதி மற்றும் போர் காரணமாக துபாய் போன்ற நாடுகளுக்கு அனுப்ப முடியாததால் இந்த வாகனங்களில் பெரும்பாலானவை இறக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, மறுஏற்றுமதிக்காக அம்பாந்தோட்டைக்கு வரும் வாகனங்களும் தடுத்துவைப்பு கட்டண சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்து அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தியிருந்த, சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை விடுவிக்க முயன்றபோது,

​​இலங்கை இறக்குமதியாளர் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த தடுத்துவைப்பு கட்டணத்துடன், வாகனத்தின் விலை தற்போது 7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், வாகனத்தின் விலை அதன் உண்மையான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

அதிகப்படியான தடுத்துவைப்பு கட்டணம் காரணமாக வாகனத்தை விடுவிக்கும் முயற்சியை இறக்குமதியாளர் பலர் கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகம் ஒரு சீன நிறுவனத்திற்கு மாற்றப்பட்ட பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சுங்கத்துறை அதிகாரி கூறியுள்ளார்.