மனைவி மற்றும் 2 மகள்களை கொன்றுவிட்டு தன் உயிரையும் மாய்த்துக் கொண்ட தந்தை!!

31

கர்நாடகாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தந்தை தன் உயிரை தானே மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் ஹுன்சூர் நகரில் உள்ள நியூ மாருதி லே அவுட் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

49 வயது ஹரிஷ் என்ற நபர் தன்னுடைய 36 வயது மனைவி நிச்சிதா, 13 வயது மகள் நெக்சா மற்றும் 6 வயது மகள் ரக்ஷா ஆகியோரை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தந்தை ஹரிஷ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளின் வாயில் ஒட்டும் நாடா-வை(Adhesive tape) வைத்து மூச்சுத்திணறச் செய்துள்ளார்.

பிறகு அவரின் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தன்னுடைய உயிரையும் மாய்த்து கொண்டுள்ளார். வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது காவல்துறை அதிகாரிகள் கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

அதில், தன்னுடைய கடைசி ஆசைகள் என்று சில கோரிக்கைகளை குறிப்பிட்டுள்ளார். ஹுன்சூர் நகர பொலிஸார் தற்போது இந்த சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நால்வரின் மரணத்திற்கான சரியான காரணம் என்னவென்று இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.