வவுனியாவில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!!

26

வவுனியாவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(21.07.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது.

அத்துடன் இறம்பைக்குளம் பகுதியில் உள்ள கருமாரி அம்மன் கோயில் மற்றும் அதே பகுதியில் உள்ள நாகபூசனி அம்மன் கோயில், குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயில், வவுனியா நகர் இலுப்பையடி பகுதியில் உள்ள உணவகம் என பல இடங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர், உணவக உரிமையாளர் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்திருந்தனர்.

குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது தேக்கவத்தை பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய நபர் ஒருவர் மற்றும் சகோதரர்களான கள்ளிக்குளம் பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய தம்பி மற்றும் மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அண்ணா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சபாரி மோட்டார் சைக்கிள் உட்பட ஏனையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.