
கல்வி நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த சிறுமியொருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடத்தப்பட்டு பின்னர் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று வல்வெட்டித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உடுப்பிட்டியிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் தரம் எட்டில் கல்வி பயிலும் 13 வயதான சிறுமியே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்று மாலை 6 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திலிருந்து குறித்த சிறுமி வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் சிறுமியை வலுக் கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் இழுத்து ஏற்றியுள்ளனர்.
சிறுமி சத்தம் போட முடியாதவாறு வாயையும் பொத்தியுள்ளனர். பின்னர் சிறுமியை அச்சுறுத்தி, வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதிக்கு கொண்டு சென்று காட்டிற்குள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த போது சிறுமி உதவிகோரி கூக்குரலிட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அப்பகுதி வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்று சிறுமியை காப்பாற்றியுள்ளதாக தெரியவருகிறது.
அதன்பின்னர் காப்பாற்றிய சிறுமியை நாகர்கோவில் கிழக்கு கிராமத்திற்கு கொண்டு சென்று மக்களிடம் விபரத்தைக் கூறியதுடன் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.
அதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்து சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் சிறுமியை மீட்டு பெற்றோரையும் வரவழைத்து பாதுகாப்பாக வல்வெட்டித்துறைக்கு கூட்டிச் சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.





