GovPay மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!!

36

உத்தியோகபூர்வ GovPay அமைப்பை ஒத்த போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களை ஏமாற்றிப் பணமோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாரதிகள் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும்போது பொலிஸாரால் வழங்கப்படும் வீதி அபராதப் பத்திரங்களுக்கான தொகையை GovPay மூலம் செலுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, போலி இணையதள முகவரிகளை உருவாக்கி மோசடி கும்பல்கள் பணத்தைக் கொள்ளையடித்து வருவது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாக, ‘இலங்கை பொலிஸ்’ எனும் பெயரில் வேகக்கட்டுப்பாட்டை மீறியமை உள்ளிட்ட வீதிப் போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி,

அபராதத்தைச் செலுத்துமாறு போலியான குறுஞ்செய்திகள் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக பொலிஸாரின் அறிவிப்பில், இலங்கை பொலிஸார் வீதிப் போக்குவரத்து விதிமீறல்களின் போது,

சம்பந்தப்பட்ட நபருக்குச் சம்பவ இடத்திலேயே தவறைச் சுட்டிக்காட்டி அபராதப் பத்திரத்தை வழங்குவர் அல்லது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வர். அதுவே தற்போதைய நடைமுறையாகும்.

அதேபோன்று, கண்காணிப்பு கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டாலும் கூட, குறுஞ்செய்தி மூலம் வங்கி கணக்கு விபரங்களைக் கோரும் நடைமுறை பொலிஸாரிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இல்லை என்றும், எனவே பொதுமக்கள் இதுபோன்ற போலியான குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான போலி இணைப்புக்களைப் பயன்படுத்திப் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரித்துள்ள பொலிஸார், ஏற்கனவே இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

GovPay என்பது உங்களது அதிகாரப்பூர்வ வங்கி செயலிகள் அல்லது நிதித் தொழில்நுட்ப செயலிகள் மூலமாக மட்டுமே இயங்கும் ஒரு கட்டணச் சேவையாகும்.

குறுஞ்செய்தி அல்லது பிற உத்தியோகபூர்வமற்ற வழிகளில் வரும் எந்தவொரு கட்டண இணைப்புகளையும் பயன்படுத்த வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.