இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர்கள் : திருமணத்தை நடத்தி வைத்த இரட்டைப் பாதிரியார்கள்!!

17

பொதுவாக இரட்டையர்கள் என்றாலே அரிதாக பார்க்கப்படுவது உண்டு. ஆனால், இரட்டை இரட்டையர்களை மணந்து, அதனை இரட்டையர்கள் நடத்தி வைத்த அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கேரளாவின் சங்கனாச்சேரி வெட்டுபரம்பிலை சேர்ந்த குஞ்சுமோன் தாமஸ் – ஜோமோல் தம்பதியினரின் இரட்டை மகன்கள் அகில் மற்றும் நிகில். பத்தனம்திட்டா மாவட்டம் குளத்தூர் கும்புலுவேலியைச் சேர்ந்த டோமிச்சன், மேரிக்குட்டி தம்பதியரின் இரட்டை மகள்கள் மகி, மரியா.

கடந்த வியாழக்கிழமை, சங்கனாசேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் அகில் மேகியை திருமணம் செய்துள்ளார். அகிலின் இரட்டை சகோதரரான நிகில், மேகியின் இரட்டை சகோதரியான மரியாவை திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தை காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் இரட்டைப் பாதிரியார்களான அருட்தந்தை ஆன்டோ பேழும்கட்டில் மற்றும் அருட்தந்தை அஜோ பேழும்கட்டில் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளனர்.

இந்த திருமணத்திற்கு, பாலாவைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜெரோன் ஜேம்ஸ் மற்றும் ஜோஹன் ஜேம்ஸ் பலிபீடத்தில் உதவியுள்ளனர். இரு சகோதரர்களும் வணிகக் கப்பலிலும், சகோதரிகள் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் பணிபுரிகின்றனர்.

“இரட்டைக் குழந்தைகள் சூழ திருமணம் செய்துகொள்வது சிறுவயதிலிருந்தே எங்கள் கனவாக இருந்தது. எங்கள் பெற்றோரும் குடும்பத்தினரும் கூட அதை விரும்பினார்கள்” என அந்த சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.

“இரட்டைக் குழந்தைகளின் திருமணத்தை நடத்தி வைப்பது மிகவும் சிறப்பானது. இது வாழ்நாள் முழுவதும் நினைவுகளைத் தரும் ஓர் அனுபவம். அவர்கள் ஒன்றாகப் பிறந்தார்கள், ஒன்றாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். நாங்களும் ஒன்றாகவே பாதிரியார் ஆனோம். இவை அழகான நினைவுகள்” என்று பாதிரியார்கள் கூறினார்கள்.