இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடிக் கும்பல்!!

124

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி வலைப்பின்னல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் குற்றவாளிகள் போலி வீடியோ அழைப்புத் தொழில்நுட்பத்தை பிரதானமாகப் பயன்படுத்தி, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர்.

இந்த மோசடி செயல்முறையானது Hi போன்ற சாதாரண குறுஞ்செய்தி மூலம் ஆரம்பமாகிறது. அனுப்பும் நபர் யார் என்பதை சரியாக சரிபார்க்காமல் பலர் இதற்கு பதிலளிப்பதன் மூலம் பாரிய ஆபத்தில் சிக்குகின்றனர்.

ஆரம்பத்தில் நீண்ட நேரம் உரையாடலைத் தொடராவிட்டாலும், சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் குறுஞ்செய்திகளை அனுப்பப்படுகின்றது. இதன் மூலம் இந்த மோசடி நபர்கள் தொடர்பாடலை புதுப்பிக்கின்றனர்.

காலப்போக்கில் படிப்படியாக நம்பிக்கையை கட்டியெழுப்பும் மர்ம நபர், பாதிக்கப்பட்டவர் தம்மீது உணர்வுபூர்வமாக ஈர்க்கப்பட்டுள்ளதை உறுதி செய்ததும், புகைப்படங்களையும் தனிப்பட்ட செய்திகளையும் அனுப்பத் தொடங்குகின்றனர்.

மக்கள் அறியாமலேயே இந்த வலையில் சிக்குகின்றனர். அதன் பின்னர் உரையாடலை வட்ஸ்அப் வீடியோ அழைப்புகளுக்கு மாற்றுமாறு மோசடி நபர்கள் வற்புறுத்துகின்றனர்.

சம்பந்தப்பட்ட வீடியோ அழைப்புகளின் போது பொருத்தமற்ற மற்றும் ஆபாசமான முறையில் நடந்து கொள்ளுமாறு பாதிக்கப்பட்டவர்களைத் மோசடி நபர்கள் தூண்டுகின்றனர்.

பின்னர் அச்சுறுத்தும் நோக்கத்திற்காக அந்தச் சந்தர்ப்பங்களின் Screenshots மற்றும் வீடியோ காட்சிகளை இரகசியமாக பதிவு செய்து கொள்கின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் நிர்வாணமாக இல்லாவிட்டாலும், அவர்கள் பரிமாறிக்கொண்ட செய்திகளின் Screenshots மற்றும் பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் கூட அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

பிளாக்மெயில் செய்வதற்கு தேவையான பொருட்கள் கிடைத்தவுடன், அந்தப் பதிவுகள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் சமூக வலைத்தள நண்பர்களுக்கு அனுப்புவதாகக் குற்றவாளிகள் அச்சுறுத்துகின்றனர்.

உறவினர்களுக்கு கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான செய்திகள் குறித்து அறியவரும் வரை அல்லது இந்த கடுமையான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படும் வரை பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வலையில் சிக்கியுள்ளதை புரிந்து கொள்வதில்லை.

ஆரம்பத்தில் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை சிறிய தொகையை கோரும் மோசடி நபர்கள், அந்தப் பணத்தை செலுத்தியவுடன் தகவல்களை அழித்து விடுவதாகப் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர். எனினும் முதல் கட்டப் பணப் பரிமாற்றத்திற்கு பின்னரும் கோரிக்கைகள் நிற்பதில்லை.

மாறாக, அதன் பின்னர் அதிகமான பணத்தைக் கோரி சில பாதிக்கப்பட்டவர்களிடம் லட்சக்கணக்கில் கப்பம் அறவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென கணினி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.