தந்தையின் இறுதிச் சடங்கிற்கு வர நேரமில்லை : வீடியோ அழைப்பில் பார்த்த மகள்கள்!!

31

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த தந்தையின் இறுதி சடங்கிற்கு வர நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலம் இறுதிச்சடங்கை பார்த்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த 74 வயதான துணி வியாபாரி சிவசரண் ராம்ரதன் குப்தாவிற்கு 3 மகள்கள் உள்ளனர். சிவசரண் தனது 3 மகள்களையும் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து தந்தையாக தனது கடமையை நிறைவேற்றியுள்ளார். 2 மகள்கள் ஆசிரியையாக உள்ளனர்.

ஒரு மகள் நேபாளத்திலும், மற்றொரு மகள் உத்தரபிரதேசத்திலும், இன்னொரு மகள் மும்பையில் வசித்து வந்தாலும், தனது பெற்றோரை கவனித்து கொள்ள முடியாது என ஹரியானாவில் உள்ள சோனிபட் முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

அவரது மனைவி மீனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமான நிலையில், சிவசரணும் கடந்த சில மாதங்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு தற்போது காலமாகியுள்ளார்.

சிவசரணின் இறப்பு குறித்து அவரது மகள்களுக்கு முதியோர் இல்ல நிர்வாகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேரில் வந்து கலந்து கொள்ள நேரமில்லை என தெரிவித்துள்ள மகள்கள் வீடியோ கால் மூலமாக இறுதிசடங்கை பார்த்துள்ளனர்.

இது குறித்து பேசிய முதியோர் இல்ல நிர்வாகி, அவர் முதியோர் இல்லத்தில் இருந்த தொலைபேசி மூலம் தனது மகள்களுடன் அடிக்கடி பேசி வந்தார். ஆனால், உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, அவர்களது தொலைபேசி அழைப்புகள் குறைந்துவிட்டன.

அவர் இறப்பதற்கு 20 நாட்களுக்கு முன்பே அவரின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து அவரது மகள்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அவரைப் பார்க்க வரவில்லை.

அவர் இறந்த பின்னர் நிர்வாகம் மீண்டும் மகள்களைத் தொடர்புகொண்டு, சோனிபட்டுக்கு வந்தால் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்து தருவதாகக் கூறியது. ஆனால், பயணம் செய்யத் தங்களுக்கு நேரமில்லை என்றும், வீடியோ காலில் பார்ப்பதாகவும் மகள்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு மகள் இறுதிச்சடங்கை முறையாக நடத்த கோரி, ஆன்லைனில் ரூ. 5,100 அனுப்பினார். உடலை தகனம் செய்த பிறகு, இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் வீடியோக்களை அனுப்புமாறு கேட்டனர்.

அவர்களில் ஒருவர் தொலைபேசி அழைப்பில், “இது இன்னும் எவ்வளவு நேரம் எடுக்கும்? நாங்கள் சாப்பிடவும் குளிக்கவும் வேண்டும்” என்று கூறுவது கேட்டது” என தெரிவித்துள்ளார்.

முதலில் அவரின் அஸ்தியை கொடுக்குமாறு கேட்ட அவரது மகள்கள், பின்னர், சோனிபட்டுக்கு வர தங்களுக்கு நேரமில்லை என்று கூறி அஸ்தியை கங்கையில் கரைக்குமாறு முதியோர் இல்ல நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.