இலங்கையில் ஆண்டுதோறும் திடீரென உயிரிழக்கும் 7000 பேர் : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

51

இலங்கையில் வளி மாசடைவதன் காரணமாக வருடாந்தம் சுமார் 7,000 திடீர் மரணங்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 7 முதல் 8 மில்லியன் வரையான மக்கள் வளி மாசடைவதன் தாக்கங்களால் உயிரிழப்பதாகவும், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று, இலங்கையிலும் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் வளி மாசடைவால் ஏற்படுவதாகவும், இதற்கு காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள் காரணங்களாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஆஸ்துமா, மூச்சுத்திணறல் மற்றும் நாட்பட்ட நுரையீரல் நோய்கள் ஏற்படுவதாகவும், வளி மாசடைவால் மாரடைப்பு, இதய நோய்கள், பக்கவாதம் போன்ற நோய்களும் ஏற்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், வீட்டுக்குள்ளான எரிப்பு செயற்பாடுகளில் விறகு எரியும் போது தீங்கு விளைவிக்கும் புகை வெளியேறுவதாகவும், வெளிப்புற சூழலை விட வீட்டுக்குள்ளான வளி மாசடைவானது ஐந்து மடங்கு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் கணிசமாக அதிகரித்து வருவதாகவும், மூடிய இடத்திற்குள் மண்ணெண்ணெய் அடுப்பில் சமைப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.