
இந்திய அணியின் ஈடு இணையில்லாத தலைவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் தோனி. 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதன் மூலம் பிரபலமானார்.
அடுத்து, 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை இவரது தலைமையிலான 28 வருடத்திற்கு பிறகு இந்திய அணி பெற்றதன் மூலம் தோனியின் புகழ் உச்சிக்குப் பரவத் தொடங்கியது.
தொடர்ந்து பல ஒருநாள் போட்டிகளில் இவர் தலைமையிலான இந்திய அணி வெற்றியை பெற்றதையடுத்து, ஒருநாள் போட்டிகளில் முதல் இடத்தை இன்றும் தக்கவைத்து உள்ளது. தனிப்பட்ட முறையிலும், அணிக்கும் பல்வேறு சாதனைகளை பெற்றுத்தந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை தற்போது படமாக்க முடிவு செய்துள்ளனர்.
பிரபல பொலிவுட் இயக்குனர் நீரஜ் பாண்டே, டோனியின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவெடுத்துள்ளார். எம்.எஸ்.டோனி என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் டோனியாக கை போச்சே, சுத்தேசி ரொமான்ஸ் ஆகிய படங்களில் நடித்த சுசாந்த் சிங் நடிக்கிறார்.
சமீபத்தில்தான் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை படமாக பொலிவுட்டில் எடுத்தனர். அதில், மேரிகோம் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். இப்படம் பெரும் வெற்றியை பெற்றது.
இந்த வரிசையில் டோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்ததையடுத்து அடுத்த வருடம் இப்படம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.





