இனைய சூதாட்டத்தில் 15 லட்சத்தை இழந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

24

ஆன்லைன் விளையாட்டுக்கள் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்குமோ? ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல வருடங்களாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அவை அப்பாவி மக்களின் பணத்தைப் பறித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில் பெங்களூரு அருகே ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாலும், அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையாலும் 28 வயது இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகியைப் பூர்வீகமாகக் கொண்ட அருண் – ரஞ்சிதா (28) தம்பதியினர், கடந்த 5 ஆண்டுகளாகப் பெங்களூரு நெலமங்களாவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

ரஞ்சிதா அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

ரஞ்சிதா கடந்த ஒரு ஆண்டாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி அதில் பெரும்தொகையை இழந்துள்ளார். இதனால் ஏற்பட்ட ரூ.15 லட்சம் கடனை அவரது கணவரும் தாயாரும் கஷ்டப்பட்டு அடைத்துள்ளனர்.

இந்நிலையில் தனது கடன்கள் அனைத்தும் அடைக்கப்பட்ட போதிலும் ஆன்லைன் விளையாட்டிலிருந்து மீள முடியாமல் ரஞ்சிதா தொடர்ந்து விளையாடி மேலும் பல லட்சங்கள் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட கடும் மன உளைச்சலில், கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நேரத்தில் ரஞ்சிதா வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த நெலமங்கலா ஊரகப் போலீசார், ரஞ்சிதாவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டுகளால் ஒரே ஒரு தவறான முடிவால் 7 வயதுச் சிறுவன் தாயை இழந்து தவிக்கும் நிலை அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.