
கர்நாடக மாநிலத்தில் காதல் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே 21 வயதான புதுமணப் பெண் கிணற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் கரினபாலய்யனஹட்டியைச் சேர்ந்த சுமலதா (21) என்ற பெண், ஆடு மேய்க்கும் தொழில் செய்து வரும் தனது உறவினரான கஜேந்திரா என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறிய அவர், உறவினர்கள் உதவியுடன் என். மகாதேவபுரா பகுதியில் உள்ள ஆட்டுக்கொட்டகையில் தங்கியுள்ளார்.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதியம் ராமசாகரா அருகே உள்ள ஈஸ்வரநதிஹிப்பே கோயிலில் வைத்து கஜேந்திரா – சுமலதா திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்தத் திருமணப் புகைப்படங்கள் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
திருமணம் முடிந்து தம்பதியினர் ஆட்டுக்கொட்டகைக்குத் திரும்பிய நிலையில், வெள்ளிக்கிழமை அன்று சிறுநீர் கழிக்க வெளியே சென்ற சுமலதா நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. கஜேந்திரா மற்றும் நண்பர்கள் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து சுமலதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலக்கு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை, ஆட்டுக்கொட்டகைக்கு அருகே உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து சுமலதா சடலமாக மீட்கப்பட்டார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரஞ்சித் குமார் பண்டாரு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்காக மொளகால்முரு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுமலதாவின் மரணத்திற்குக் காரணம் தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதியா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





