இலங்கையில் எச்சரிக்கை மட்டத்தில் எல் நினோவின் தாக்கம் : வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!!

31

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று(24) பகல் வேளையில் வெப்பச் சுட்டெண் ‘ எச்சரிக்கை’ (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இயற்கை அபாயங்கள் பற்றிய முன்னெச்சரிக்கை மையம் செம்மஞ்சள் நிற (Amber) வெப்ப வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

குறிப்பிடப்பட்ட சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பமானது பகல் நேரத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வெப்பமான வானிலையின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனவே போதுமான அளவு நீரைக் குடிக்க வேண்டும்; முடிந்தவரை நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்குமாறும், வெப்பத்தினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் மற்றும் நோயாளிகள் குறித்து அவதானம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகனங்களில் சிறுவர்களைத் தனியாக வாகனங்களுக்குள் விட்டுச் செல்லக் கூடாது. வெளியில் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைத்து,

நிழலான இடங்களில் தங்குவதுடன் அதிகளவில் திரவ ஆகாரங்களை அருந்த வேண்டும். இலகுரக, வெள்ளை அல்லது லேசான நிறமுடைய ஆடைகளை அணியவும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, 7 மாவட்டங்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இந்த 7 மாவட்டங்களில் உள்ள 23 பிரதேச செயலகப் பிரிவுகள் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மையம் சுட்டிக்காட்டுகின்றது.

மேலும், 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 நபர்கள் எல் நினோவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை மையம் கூறியுள்ளது.

இந்தத் தாக்கத்தின் காரணமாக, 20 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குக் குடிநீர் விநியோகிக்கவும் பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.