பேருந்தில் தவறவிட்ட 10 இலட்சம் ரூபாய் தங்கச் சங்கிலி : உரியவரிடம் ஒப்படைத்த சாரதி – நடத்துனர்!!

173

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பெண் ஒருவரின் 10 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று(23.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தினத்தன்று பருத்தித்துறை சாலையில் இருந்து வட்டுக்கோட்டை வரை செல்லும் 767 வழித்தட (4241 இலக்க) இ.போ.ச பேருந்தின் மதிய சேவையின் போது பயணித்த பெண் வட்டுக்கோட்டையில் மரணச் சடங்கொன்றுக்குச் சென்றுவிட்டு, இன்னொரு உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற பின்னரே அவரது கழுத்தில் இருந்த இரண்டரைப் பவுண் தங்கச்சங்கிலி இல்லாததை உணர்ந்தார். அதன்பின்னர் அவர் வழிநெடுகிலும் சென்றுபார்த்தபோதும் சங்கிலியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

“இனிச் சங்கிலி கிடைக்காது” என்ற கவலையோடு, மீண்டும் வட்டுக்கோட்டையில் இருந்து பருத்தித்தித்துறை நோக்கிச் செல்வதற்கான மீண்டும் அதே பேருந்தில் ஏறியுள்ளார்.

இதன்போது, கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை என தெரியப்படுத்திய வேளையில், அவர்கள், “ நீங்கள் அமர்ந்திருந்த ஆசனத்தில் இந்தச் சங்கிலி இருந்தது” என ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னர் பருத்தித்துறை டிப்போவுக்கு சென்று பேருந்தை சுத்தம் செய்த பொழுது சங்கிலியின் எஸ் வடிவிலான இணைப்புப் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அதனையும் குறித்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு தாம் கண்டெடுத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான நகையினைக்

கண்டெடுத்து உரியவர்களிடம் சேர்த்த பருத்தித்துறை டிப்போவை சேர்ந்த சாரதி – மனோகரன் சயந்தன் மற்றும் நடந்துனர் – இராசநாயகம் பிறின்சிராஜா இருவருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.