ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு : பற்றி எரிகிறது தமிழகம்: பதற்ற நிலை தொடர்கிறது!!

531

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தில் அதிமுக-வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது.

ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அதிமுகவினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

சிறிய அளவில் உள்ள காவலர்களும் அதிமுகவினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அதிமுகவினர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிமுகவினர் கடைகள் மீது கல்வீச்சில் ஈடுபட்டு வன்முறை செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டு வருகின்றன. தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி போக்குவரத்துக் கழகம் சென்னைக்கு வரும் வோல்வோ பேருந்துகளை ரத்து செய்துள்ளது.

மேலும் சில தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதோடு, ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதோடு சாலையில் பேரூந்துகள் எரிக்கப்பட்டு கடைகளும் எரிக்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

2

1 3