கணவனைக் குத்திக் கொன்று குடலை உருவி பையில் போட்ட மனைவி!!

22

அரியானா மாநிலம் குருஷேத்திரத்தில் கணவனைக் கொடூரமாகக் குத்திக் கொன்று, அவரது குடலை ஒரு பையில் திணித்த மனைவி, வீட்டு உரிமையாளரைப் பார்த்ததும் மாடியில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் (40), அவரது மனைவி விமலா தேவி. இவர்களுக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.

குருஷேத்திரத்தில் உள்ள பெகோவா சாலையில் ராஜேஷ் தனியார் நிறுவனத்தில் குடிநீர் விநியோகிக்கும் பணி செய்து வந்ததால், அங்கிருந்த ரிங்கு என்பவரது வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் வீட்டின் மாடியில் தம்பதியினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு வீட்டு உரிமையாளர் ரிங்கு மாடிக்குச் சென்று பார்த்த போது,

ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். அவரது வயிற்றில் இருந்து வெளியான குடல்களை விமலா தேவி ஒரு பிளாஸ்டிக் பையில் ஆக்ரோஷமாக அடைத்துக் கொண்டிருந்தார்.

வீட்டு உரிமையாளரைப் பார்த்ததும் பயத்தில் விமலா தேவி மாடியிலிருந்து கீழே குதித்தார். இதில் அவரது முதுகெலும்பில் பலத்த காயங்கள் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார்.

ராஜேஷின் வயிறு சுமார் 35 சென்டிமீட்டர் அளவிற்குப் பிளக்கப்பட்டிருந்தது. பிரேதப் பரிசோதனையில் அவரது கல்லீரலின் பெரும்பகுதியும் மற்றும் வலது சிறுநீரகமும் உடலில் இருந்து மாயமாகியிருந்தது கண்டறியப்பட்டது.

மாந்திரீக மற்றும் பரம்பரை வைத்தியப் பயிற்சிகளில் விமலா தேவி ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுவதால், இது நரபலி காரணமாக நடந்ததா அல்லது உறுப்புகள் திருட்டுக்காக நடந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து 3 கத்திகளை மீட்டுள்ள காவல்துறையினர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள விமலா தேவி நினைவு திரும்பியவுடன் கைது செய்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.