
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 7402 என்ற கைதி எண் வழங்கப்பட்டது
பெண்கள் சிறைக்கு அருகில் இவரது அறை இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் கொண்ட அறையில் தனிக் கழிவறை வசதிகள் அதற்குள் உள்ளன.
குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது. அவருக்கு இரவு உணவாக ராகி உருண்டை, 200 கிராம் சாதம் மற்றும் 2 சப்பாத்திகள் என்பன வழங்கப்பட்டன. ஆனால் அது வேண்டாம் என்று கூறி பழங்களை வாங்கி அவர் சாப்பிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுடன் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு முறையே கைதி எண் 7403, 7404, 7405 ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
மென்பொருள் பொறியாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சுபா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டனர்.
சுதாகரனுக்கு முன்னாள் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்தன் ரெட்டி இருக்கும் அறைக்கு அடுத்த விஐபி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உயர்பாதுகாப்பு மத்திய சிறையான பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் மிகமுக்கியமானவர்கள் அறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் கைதி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது





