இலங்கையில் புதிதாக சிம் அட்டை வாங்குவோர் கவனத்திற்கு : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

27

புதிதாக சிம் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் புதிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, சிம் அட்டைகள் தொடர்பான ஒழுங்குமுறை நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைமை பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (10.09.2026) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

சிம் அட்டைகளை விநியோகிப்பதற்கான விதிமுறைகளை நாங்கள் புதுப்பித்துள்ளோம். ஏனெனில், பொலிஸ் போன்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால் சிம் விதிமுறைகளைப் புதுப்பித்துள்ளோம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் சிம் அட்டைகளைப் பயன்படுத்திச் செய்யப்படும் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளதாகவும், கூறப்பட்டது.

குறிப்பாக இது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து பெரும்பாலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிதாகச் சிம் அட்டைகளைப் பெறுபவர்கள் தங்களது நேரடிப் புகைப்படத்துடன் மட்டுமே அந்தச் சிம் அட்டையைப் பெற முடியும்.

அதற்குப் பிறகு, 2027-ல் அனைத்து தொலைபேசி மற்றும் சிம் பயனர்களுக்கும் 100 சதவீத வாடிக்கையாளர் அடையாளத்தை உறுதிசெய்யும் ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம்.

இது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது வெளிநாட்டவர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இது நடைமுறைப்படுத்தப்படும். நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு சிம்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம்.

நாட்டில் கிட்டத்தட்ட 3 கோடி மக்கள் இந்த சிம்களைப் பயன்படுத்துகின்றனர். சேவை தரம் குறைவாக இருப்பதாக மக்களிடமிருந்து முறைப்பாது வருகின்றன.

தற்போது சேவை வழங்குநர்களின் தரவுகளின் அடிப்படையிலேயே இயங்கி வருவதனால் அதனை மேலும் துல்லியமாகக் கண்டறிவதற்கான கட்டமைப்பு எம்மிடம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.