கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் வயிற்றுக்குள் சிக்கிய பல கோடி ரூபா மர்மம்!!

17

இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடிக்கும் அதிகமான பெறுமதியான 90க்கும் மேற்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிவிட்டு நாட்டுக்கு வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 43 வயதுடைய உகண்டா நாட்டைச் சேர்ந்த விவசாயி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபர் உகண்டாவின் என்டபே நகரிலிருந்து இந்த கொக்கெய்ன் போதைப்பொருளை விழுங்கிவிட்ட கட்டாரின் தோஹா நகருக்கு வந்துள்ளார்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR-664 விமானம் மூலம் நேற்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர் மதியம் வரை விமான நிலையத்தின் முதலாவது மாடியில் தங்கியிருந்துள்ளார்.

சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், விமான நிலையத்தின் உள்ளே சந்தேக நபர் தான் விழுங்கியிருந்த 13 கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் வெளியேற்றியுள்ளார்.

இந்த நபர் விழுங்கியுள்ள மீதமுள்ள கொக்கெய்ன் உருண்டைகளை வெளியில் எடுப்பதற்காக அவரை நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அவரை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.