5 மாதங்களில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் அடகு வைத்த இலங்கையர்கள்!!

37

பெரும்பாலான இலங்கையர்கள் தங்களது வாழ்வாதாரத்தைக் கொண்டுச் செல்ல தங்களிடம் இருக்கும் தங்க நகைகளை வங்கிகளில் அடகு வைத்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய(25.09.2026) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நிலை குறித்து அரசாங்கம் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
அடகு வைக்கப்படும் நகைகள்

இன்றைய சிங்கள பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியொன்றின் அடிப்படையில் ஐந்து மாதங்களில் 15 பில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகள் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வளமான நாடு, அழகான வாழ்க்கை என்று கூறுகிறீர்கள். ஆனால், 15 பில்லியன் ரூபா பெறுமதியுள்ள இந்த நகைகள் ஐந்து மாதங்களுக்குள் அடகு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நாங்கள் கூறவில்லை. மத்திய வங்கியின் தரவுகளே கூறுகின்றன.

மக்கள் தங்களது நகைகளை வீட்டில் வைத்திருக்க முடியாமல் அடகு வைக்கவில்லை. வீட்டில் வைத்திருந்தால் திருட்டுப் போய் விடும் என்ற பயத்தில் அடகு வைக்கவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக இவ்வாற தங்களுடைய தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர்.

மக்களுக்கு வாழ்வதற்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தங்கங்களை அடகு வைத்து வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் உண்மை. உணவுக்காகவும், வாழ்வதற்காகவும் தங்கள் பசியை தீர்ப்பதற்காகவும் மக்கள் இந்த இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுதான் உண்மை என குறிப்பிட்டுள்ளார்.