திருமணத்திற்கு 21 வயது வரை காத்திரு : பொலிஸ் தந்தையை சுட்டுக் கொன்ற 18 வயது சிறுவன்!!

15

சண்டிகரில் காவல்துறையின் தலைமை காவலர் அவரது 18 வயது மகனால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் காவல்துறை தலைமையகத்தின் கணக்கு பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிதின் சிங் வெள்ளிக்கிழமை அவரது செக்டார் 22 அரசு இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முந்தைய நாள் அவருடைய 18 வயது மகன் அர்மானுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னை தன்னுடைய காதலியுடன் உடனடியாக திருமணம் செய்து வைக்குமாறும் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்றும் தந்தை நிதின் சிங்கை அவரது 18 வயது மகனான அர்மான் தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார்.

அத்துடன் பல்வேறு தேவைகளுக்காக பணமும் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.  ஆனால் இந்தியாவில் ஆண்களுக்கான திருமண வயது 21 என்பதால், அர்மான் 21 வயது ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்று தந்தை நிதின் சிங் அறிவுறுத்தியுள்ளார்.

இது வாக்குவாதமாக வெடித்ததோடு, வீட்டிற்குள் ஏற்பட்ட குடும்ப தகராறின் போது தன்னுடைய தாயின் கழுத்தை பிடித்து தாக்கியுள்ளார். மேலும் தந்தையை துப்பாக்கியால் சுட்டதுடன் மட்டுமில்லாமல் வீட்டிற்குள் யாரோ நுழைந்து தனது தந்தையை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டதாக நாடகம் ஆடியதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் அர்மானை கைது செய்துள்ளனர். மேலும் இந்த செயலுக்காக எந்தவொரு குற்ற உணர்வும் அவரிடம் இல்லை என்று காவல்துறை அதிகாரி சுதேஷ் குமார் தெரிவித்துள்ளார். தந்தை சுட்டுக் கொல்வதற்கு முன்னதாக, அர்மான் ஏற்கனவே மற்றொரு குற்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நண்பர் ஒருவருடைய காரில் வேகமாக சென்று இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரை மோதி விபத்துக்குள்ளாக்கினார். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அர்மான் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.