180 பயணிகளுடன் பயணித்த விமானத்தில் ஒலித்த அவசர சமிக்ஞை : நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு!!

97

துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த Flydubai விமானம், இன்று (30) சவுதி அரேபியாவின் வான்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்தபோது அவசர சமிக்ஞையை வெளியிட்டு, திடீரென தனது பயணப் பாதையை மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரேலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

FZ1073 என்ற விமான இலக்கத்துடன் இயங்கிய குறித்த விமானம், துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் அருகிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில், விமானம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 7700 என்ற கடத்தல் அவசர குறியீட்டை வெளியிட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள், விமான கண்காணிப்புத் தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

7700 என்பது விமானத்தில் பொதுவான அவசரநிலை ஏற்பட்டுள்ளதை குறிக்கும் சர்வதேச அவசர குறியீடாகும். எனினும், விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், விமானக் கடத்தல் முயற்சி எதுவும் இடம்பெறவில்லை என இஸ்ரேல் பின்னர் தெரிவித்துள்ளது.

பின்னர், குறித்த Flydubai விமானம் சவூதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

விமானத்தின் விமானிகள் இருவருக்கும் இடையில் விமான அறைக்குள் ஏற்பட்டதாகக் கூறப்படும் கடுமையான மோதலின்போது அவசர சமிக்ஞை செயல்படுத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், விமானத்தின் பயணப் பாதை மாற்றப்பட்டதற்கும் அவசர சமிக்ஞை வெளியிடப்பட்டதற்குமான உத்தியோகபூர்வ காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், விமானம் பின்னர் 7500 என்ற அவசர குறியீட்டையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7500 என்பது விமானத்தில் சட்டவிரோத தலையீடு அல்லது கடத்தல் போன்ற சம்பவங்களை குறிக்கும் சர்வதேச குறியீடாகும். Haaretz வெளியிட்ட தகவலின்படி, குறித்த விமானத்தில் சுமார் 180 இஸ்ரேலிய பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சமிக்ஞை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலிய விமானப்படையின் போர் விமானங்கள் அவசரமாக அனுப்பப்பட்டதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.

மேலும், விமானம் சுமார் இரண்டு நிமிடங்களில் 34,000 அடி உயரத்திலிருந்து 16,600 அடி உயரம் வரை, அதாவது சுமார் 17,400 அடி உயரத்தை இழந்து திடீரென கீழிறங்கியதாகவும் சிஎன்என் குறிப்பிட்டுள்ளது.

சில தகவல்கள், சமிக்ஞை தவறுதலாக அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கின்றன. விமானம் தரையிறங்கிய பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது விமானக் கடத்தல் சம்பவம் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவ் அருகிலுள்ள பென் குரியன் விமான நிலையம் வரை பயணிக்க திட்டமிடப்பட்டிருந்த FZ1073, இந்த இரு நகரங்களுக்கு இடையே வழக்கமாக இயக்கப்படும் Flydubai விமான சேவையாகும்.

சம்பவத்தைத் தொடர்ந்து விமானம் மற்றும் அதில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.