கோர விபத்தில் வெளிநாடு செல்ல தயாரான மகன் உட்பட 2 பிள்ளைகள் மரணம் : உயிருக்கு போராடும் தாய்!!

419

குளியாபிட்டிய – மாதம்பே பிரதான வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மின் கம்பம் ஒன்றின் மீது மோதியதில், இரு மகன்களும் உயிரிழந்துள்ளனர். பலத்த காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மூத்த மகனான 27 வயதுடைய அயோத்யா ஹன்சமால் மற்றும் இளைய மகனான 12 வயதுடைய சதித ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தாயாரான 49 வயதுடைய பிரியங்கா குமுதுனி பலத்த காயமடைந்து, சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் செல்வதற்காக மூத்த மகன் கொழும்பில் நடைபெறவிருந்த நேர்காணல் ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தாயுடனும் இளைய சகோதரனுடனும் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

மாதம்பே தொடருந்து நிலையத்தில் இருந்து அதிகாலை 5.15 மணியளவில் கொழும்பு நோக்கிச் செல்லும் தொடருந்தில் ஏறுவதற்காக வேகமாக சென்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளைக் கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் தனது இரு மகன்களையும் இழந்த தந்தையான ஹேரத் அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். “எனது மூத்த மகன் ஜப்பானுக்கு செல்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். ஜப்பானிய மொழியையும் நன்றாக கற்றுக்கொண்டார்.

கொழும்பில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றுக்காக அம்மா மற்றும் தம்பியுடனும் அதிகாலையிலேயே வீட்டிலிருந்து புறப்பட்டார்.

பலத்த எதிர்பார்ப்புகளுடன் சென்ற எனது மகனும் அவரது தம்பியும் இன்று எனக்கு இல்லாமல் போய்விட்டனர். மனைவியும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துயரத்தை எப்படித் தாங்கிக்கொள்வது என்று தெரியவில்லை.

எனது மூத்த மகன் குறித்து எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பாதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டைப் பூர்த்தி செய்துவிட்டு, அம்மாவையும் அப்பாவையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் அடிக்கடி கூறுவார்.

ஜப்பானுக்குச் சென்றால் தம்பியையும் அழைத்துச் செல்வேன். அச்சமின்றி இருக்குமாறும், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம் என்றும் அடிக்கடி மகன் குறிப்பிடுவார். அந்த எதிர்பார்ப்புகளுடன் வீட்டிலிருந்து புறப்பட்ட எனது மகனுக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தந்தை குறிப்பிட்டுள்ளார்.