நள்ளிரவு முதல் திடீரென உயர்த்தப்பட்ட எரிபொருள் விலை : பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

77

புதிய எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணங்க பேருந்து கட்டணங்களில் எந்த உயர்வும் இருக்காது என்று இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.

இதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும்.

எனினும், ஒக்டேன் 95 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதுடன், அது ஏற்கனவே இருந்த 475 ரூபாவிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.

சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 50 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன்படி 478 ரூபாவாக இருந்த அதன் விலை 528 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

அத்துடன், 382 ரூபாவாக இருந்த டீசல் லீட்டர் ஒன்றின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 392 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 285 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் விலையிலும் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.