நெஞ்சை உலுக்கும் துயரம் : தந்தை கண் எதிரே தீயில் கருகி பலியான மகள் : காப்பாற்ற முயன்ற தந்தைக்குத் தீக்காயம்!!

19

திருவாரூர் வடக்கு வீதியில் நடைபெற்ற துயரச் சம்பவத்தில், பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் தீக்குளித்து உயிரிழந்ததும், அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தை பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் வடக்கு வீதியில் சைக்கிள் கடை நடத்தி வருபவர் குமார். இவர் தனது மனைவி மற்றும் 24 வயது மகள் ஸ்ரீலேகாவுடன் கடையின் மாடியில் வசித்து வருகிறார்.

ஸ்ரீலேகா கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில், நேற்று காலை சைக்கிள் கடையில் இருந்த மண்ணெண்ணெய்யை தனது தலையில் ஊற்றித் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தீயின் வேதனை தாங்காமல் அவர் அலறியதைக் கேட்டு கீழே ஓடிவந்த தந்தை குமார், மகளைக் காப்பாற்ற முயன்ற போது அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதில் ஸ்ரீலேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த தீக்காயமடைந்த குமார் மீட்கப்பட்டுத் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஸ்ரீலேகாவுக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், சில காரணங்களால் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க முயன்றுள்ளனர்.

இதனால் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மனவிரக்தி காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவெடுத்தது தெரியவந்துள்ளது.