ரீல்ஸ் மோகம் : பெண்ணை திட்டித்தீர்க்கும் இணையவாசிகள்!!

21

ரீல்ஸ் மோகத்தால் மக்கள் எல்லை மீறி சென்று ஆபத்தான முறையில் ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைத்தளங்க்காளில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் , தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் தனது புடவையின் தலைப்பை முடிச்சாக கட்டி, பெண் ஒருவர் ரீல்ஸ் வீடியோ எடுத்து நடனமாடிய காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், சேலை மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்த பெண் ஒருவர் தண்டவாளத்தில் நிற்கிறார்.

அங்கு நின்று கொண்டிருந்த ரயிலின் இன்ஜின் பகுதியில் தனது புடவை தலைப்பை கட்டிவிட்டு, பாட்டுக்கு ஏற்ப பாலிவுட் பாணியில் ஆக்‌ஷன் செய்து தீவிரமாக நடனமாடுகிறார். குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

“ரயில்வே தண்டவாளம் போன்ற ஆபத்தான பகுதிகளில் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் வீடியோ எடுப்பது சட்டப்படி தவறானது; இந்த வீடியோ குறித்து ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் இதுபோன்று ஆபத்தான முறையில் வீடியோக்கள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அத்துமீறி நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து எச்சரித்து வருகின்றபோதும், ரீல்ஸ் மோகத்தால் யாரும் அதனை பொருட்படுத்துவதில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.