இந்தியாவில் படகு வாங்கிய கனடா வாழ் இலங்கையர் கைது!!

39

கனடா குடியுரிமை பெற்ற இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரை, நாகப்பட்டினம் கோடியக்கரையில் கியூ பிரிவு பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரணை செய்துவருவதாக இந்திய ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

பைபர் படகு (Fibre boat) மற்றும் படகு மோட்டார் இயந்திரம் ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே அவரிடம் இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ.போல் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், திங்கட்கிழமை மாலை முதல் கோடியக்கரையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் அவரைச் செவ்வாய்க்கிழமை காலை கைது செய்த கியூ பிரிவு அதிகாரிகள், விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். சந்தேகநபர் செப்டம்பர் 23 ஆம் திகதி அன்று கனடாவில் இருந்து, கட்டார் வழியாக செப்டம்பர் 25 ஆம் திகதி அன்று சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

சென்னையில் ஒரு நாள் தங்கியிருந்த அவர், செப்டம்பர் 27 ஆம் திகதி அன்று வேதாரண்யத்திற்குப் பயணம் செய்து, அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார்.

பின்னர் கோடியக்கரையில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு மாறியுள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் இவர், 1.29 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பில் படகு இயந்திரத்தையும், 50,000 ரூபாய் மதிப்பில் பைபர் படகு ஒன்றையும் கொள்முதல் செய்துள்ளார்.

அந்தப் படகு, இயந்திரம் மற்றும் ஏனைய பொருட்களைப் பறிமுதல் செய்துள்ள பொலிஸார், இவற்றை கொள்வனவு செய்ததன் நோக்கத்தைக் கண்டறிவதற்காக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.