
இலங்கை முழுவதும் 4 வலயங்களாக பிரிக்கப்பட்டு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று, நாளை மற்றும் நாளை மறுதி தினம் பிற்பகல் 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் தேசிய முறைமை இயங்குநரினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் உரிய அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பின் போது எரிசக்தி அமைச்சு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டனர்.
மின்வெட்டின் கீழ் நாடு நான்கு வலயங்களாக பிரிக்கப்படும் என்பதுடன், ஒவ்வொரு வலையத்திற்கும் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்கு மின் விநியோகம் தடைசெய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஸ்திரமற்ற தன்மை மற்றும் அவசர மின் தடைகள் காரணமாகக் கட்டமைப்பின் சமநிலையைப் பேணி, மின் விநியோகத்தை மேலாண்மை செய்யும் நோக்கில் இந்நடவடிக்கையை எடுக்க தேசிய முறைமை இயங்குநர் தீர்மானித்துள்ளார்.
அதற்கமைய, இம்மின்வெட்டுத் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் இறுதிப் அனுமதி கிடைத்த பின்னர், உரிய வலயங்களின்படி மின் தடைப்படும் குறிப்பிட்ட நேர அட்டவணைகள் மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ளன.





