
இணையத்தளங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP நிரலாக்க மொழியில் இரண்டு பாரிய பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தமது இணையத்தளங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன.
இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளுக்கான புதுப்பிப்புகளை PHP Foundation வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உடனடியாகப் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செயல்படுத்த முடியாத நிறுவனங்கள், தமது கட்டமைப்புகள் பாதுகாப்பான நிலையை அடையும் வரை இணையத்தளங்களை முடக்கி வைக்குமாறு இணையப் பாதுகாப்பு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.
பின்லாந்து அரசாங்கத்தின் பொதுவான இணையச் சேவைகளும், நெதர்லாந்தின் இணையப் பாதுகாப்பு அமைப்பின் இணையத்தளமும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எடின்பரோ நகர சபையின் இணையத்தளம் மற்றும் விக்கிப்பீடியாவின் சில சேவைகளையும் பயனர்கள் தற்காலிகமாக அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிபிசியின் சில நிகழ்ச்சிகளுக்கான இணையத்தளங்களும் செயலிழந்துள்ள போதிலும், அவை PHP பாதுகாப்புக் குறைபாடுகளுடன் தொடர்புடையவை என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NSA), பிரித்தானியாவின் தேசிய இணையப் பாதுகாப்பு மையம் (NCSC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இணையப் பாதுகாப்பு அதிகாரிகளும் PHP பயன்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாகப் பாதுகாப்புப் புதுப்பிப்புகளைச் செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளைப் பயன்படுத்தி, அங்கீகரிக்கப்படாத நபர்கள் கணினிக் கட்டமைப்புகளுக்குள் ஊடுருவி, சேவையகங்களில் உள்ள கோப்புகள் மற்றும் தரவுகளை அணுகுவதுடன், தீங்கிழைக்கும் மென்பொருட்களை நிறுவவும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
CERT-EU அமைப்பின் இடர் மதிப்பீடுகளின்படி, பயனர்களின் அனுமதியின்றி தொலைவிலிருந்து கணினிக் குறியீடுகளைச் செயல்படுத்தும் அபாயமும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Calif மற்றும் Wiz ஆகிய இணையப் பாதுகாப்பு நிறுவனங்களின் ஆய்வாளர்கள் இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டறிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக, OpenAI ஆரம்பித்துள்ள “Patch the Planet” திட்டத்தின் கீழ் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பாதுகாப்புக் குறைபாடுகள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகக் கண்டறியப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இணையத்தளங்களில் சுமார் 70 சதவீதமானவை இதனால் பாதிக்கப்படக்கூடும் என Wiz நிறுவனம் மதிப்பிட்டுள்ள போதிலும், இந்த மதிப்பீடு சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PHP Foundation, அண்மைய PHP பதிப்புகளுக்கு மட்டுமே பாதுகாப்புப் புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளதால், PHP 8.1 அல்லது அதற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள் புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
PHP என்பது WordPress, Drupal மற்றும் Joomla போன்ற இணையத்தள முகாமைத்துவக் கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு இணையச் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பிரபலமான நிரலாக்க மொழியாகும்.





