
இலங்கையில் வங்கி கடன் அட்டை (Credit Card) பயன்பாடு மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகை அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு ஒகஸ்ட் மாத நிலவரப்படி, இலங்கையில் கடன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை 213 பில்லியன் ரூபாயை தாண்டியுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய நிதித் தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத நிலவரப்படி இத்தொகை உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை வழங்கப்பட்ட கடன் அட்டைகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 223 மில்லியனாக உள்ளது. இந்த ஆண்டில் மட்டும், 130,000 இற்கும் மேற்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த புள்ளிவிபரங்களுடன் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, கடன் அட்டைகள் மூலம் செலுத்த வேண்டிய கடன் விகிதம் இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 2025-ல், கடன் அட்டைகள் மூலம் செலுத்த வேண்டிய கடன் தொகை 155 பில்லியன் ரூபாயாக இருந்தது. ஜனவரி 2026-க்குள் இவை 190 பில்லியனை தாண்டியுள்ளது.
இதனால், கடன் அட்டைகள் மூலமான கடன் வாங்கும் விகிதம் நவம்பர் 2025 முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டிசம்பர் மாதத்திற்குள், கடனின் அளவு 180 பில்லியன் ரூபாயாக தாண்டியது. இவை பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன், பலர் கடனில் நுகர்வு செய்யத்தொடங்கியுள்ளனர்.
மேலும், தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவதும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவதும், கடன் அட்டைகள் மூலம் கடன் வாங்குவதும் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவில் நெருக்கடியை எற்படுத்தியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும், உயர்ந்து வரும் எரிபொருள் விலைகள் மற்றும் அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்கள் உள்ளிட்ட பணவீக்க சுமையும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதுடன், வரிகள், அபராதங்கள், வட்டி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் அதிகரிப்புக்கு ஏற்ப வருமானம் அதிகரிப்பதில்லை என்றும், இந்த இடைவெளியை நிரப்ப மக்கள் கடன் வாங்க வேண்டியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.





