
புதிய இணைப்பு : நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, நாளை(27.10.2026) நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு : நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மாகாணத்தின் சில பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன
இதற்கமைய, மத்திய மாகாணத்தின் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில கல்வி வலயங்களுக்கு உட்பட்ட 26 பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு : நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளில் வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மோசமான வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலைகளில் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






