பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்கு : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

68

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது மர்மமான முறையில் உயிரிழந்த 29 வயதுடைய இஷார ஹர்ஷ குமார என்ற இளைஞரின் இறுதிச் சடங்கின்போது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தத் தடை விதித்து நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

கெஸ்பேவ மேலதிக மாவட்ட நீதிபதி கே.எம்.ஜே.பி. சமரசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் இறுதிச் சடங்குகள் கிரிவத்துடுவ, கல்கந்த பொது மயானத்தில் நடைபெறவுள்ளன.

இதன்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதையும் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதையும் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிரிவத்துடுவ, மூனமலை தோட்டம் 17ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீட்டிலிருந்து கல்கந்த பொது மயானம் வரையிலான பிரதான மற்றும் உள்வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கஹதுடுவ பொலிஸாரால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (1)ஆம் பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்ட கோரிக்கையைப் பரிசீலித்த நீதிமன்றம், 14 நாட்கள் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, உயிரிழந்த இளைஞரின் சடலம் வைக்கப்பட்டிருந்த வீட்டுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு, ஐந்து பிரதிவாதிகளுக்கு நீதிமன்ற உத்தரவை வாசித்துத் தெளிவுபடுத்தி வழங்கியுள்ளது.

போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையான இஷார ஹர்ஷ குமார, கடந்த 25ஆம் திகதி பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தபோது திடீரென சுகவீனமடைந்ததாகக் கூறப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

எனினும், பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களே மரணத்திற்குக் காரணம் என உயிரிழந்தவரின் மனைவியும் உறவினர்களும் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதற்கிடையில், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், மழுங்கிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட உட்புறக் காயங்களே மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளின் பணி இடைநிறுத்தப்பட்டதுடன், குறித்த பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இறுதிச் சடங்கின்போது பதற்றமான சூழல் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்படக்கூடும் எனக் கருதி பொலிஸார் நீதிமன்றத் தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.