வவுனியாவில் இளைஞர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் விவகாரம் : மருத்துவ அறிக்கையில் மதுபோதையில் இருக்கவில்லை எனத் தெரிவிப்பு : நான்கு பொலிஸாரையும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

94

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இன்று (03.11.2026) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதற்கு முன்னதாக, குறித்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இளைஞர் தரப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் ஆஜராகி, தமது தரப்பு நியாயங்களையும் கோரிக்கைகளையும் நீதிமன்றில் முன்வைத்தனர்.

இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில், குறித்த இளைஞர் மதுபோதையில் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதலுக்கான அடையாளங்களும் அவரது உடலில் காணப்படுவதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவ அறிக்கை மற்றும் சம்பவம் தொடர்பான காணொளி உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த இளைஞரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

இளைஞர் தரப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் தலைமையிலான சட்டத்தரணியகளான திவின்சன் மற்றும் ஜனனி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.